October 17, 2016

M.S. தோனி சொல்லப்படாத கதை - ஒரு விமர்சனம்ஹாலிவுட் திரையுலகில் பிரபலமான ஒரு திரைநடை (genre) விளையாட்டு சார்ந்த திரைப்படங்கள்.  இந்திய திரைப்படங்களில் இது அவ்வளவாக கையாளப்படாத ஒரு விஷயமாகவே இருந்து வந்திருக்கிறது. அப்படியே எடுத்தாலும் இயக்குனரின் திறமையின்மை காரணமாக படம் ஓடாமல் போகும் (உதாரணம் - அசார்). இந்த நிலமையை மாற்றும் வண்ணம் அமைந்திருக்கும் படம் M.S. தோனி - சொல்லப்படாத கதை. A Wednesday, Baby போன்ற வெற்றிப்படங்களை தந்த நீரஜ் பாண்டேயின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பொதுஜனங்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அப்படி என்ன நன்றாக இருக்கிறது என்று கேட்கிறீர்களா? மேலே படிக்கவும்.

இந்த விமர்சனம் வித்தியாசமாக இருக்கட்டும் என்பதற்காக இந்த திரைப்படத்தையே ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரராக அனுமானித்துக்கொண்டு அது அடிக்கும் நான்கு ரன்கள், ஆறு ரன்கள், மற்றும் விக்கெட்குகள் என்ற வகையில் படத்தின் நிரைகுறைகளைப் பார்ப்போம். 

சிக்சர்ஸ்

தோனியின் வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட தோல்விகளையும் போராட்டங்களையும் அவற்றை மீறி அவர் எப்படி வெற்றிப்படிகளில் ஏறுகிறார் என்பதையும் உணர்வுபூர்வமாக வழங்கி ஒரு ஆறு ரன்களை பெறுகிறது இப்படம். சிறுவயதில் பேட்டிங் கற்றுக்கொள்வதில் ஆசிரியர் போட்ட தடைகள் முதற்கொண்டு, 19 வயதிற்குட்பட்டவர்கள் அணியில் தேர்ச்சி அடையாதது, துலீப் டிராபியில் பங்குபெற தேர்ச்சிபெற்ற விபரம் கூட சரியான நேரத்தில் தெரியவராதது, வீட்டுநிலமை காரணமாக ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்தமுடியாமல் அவதிப்படுவது, காதலியின் அகால மரணம் என ‘வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா’ என்ற பாட்டிற்கு உதாரணமாக இருந்திருக்கிறார் தோனி. அந்த சமயங்களில் அவரது நண்பர்கள் மட்டுமே அவருக்கு பண/மன உதவியாக இருந்திருக்கிறார்கள் என்று பார்க்கும்போது இந்த நாடு விளையாட்டு வீரர்களை இன்னும் எவ்வளவு ஊக்குவிக்கலாம் என்பது நிதர்சனமாகிறது.

அடுத்த ஆறு ரன்கள் படத்தின் கிளைமாக்ஸாக 2011 உலகக்கோப்பை இறுதி மேட்சை மறுபடி கண்முன் நிறுத்தி நம்மையெல்லாம் உணர்ச்சிப்பிழம்பாக ஆக்கியதற்காக. தோனியின் அம்மாவின் பூஜை, அப்பாவின் கண்ணீர், நண்பர்களின் படபடப்பு, ஒட்டுமொத்த இந்தியர்களின் BP எகிறியது, வெற்றி பெற்றபின் இந்திய அணியின் கொண்டாட்டம் எல்லாவற்றையும் மறுபடி காட்டி தோனியைப்போலவே கடைசிப்பந்தில் சிக்சர் அடித்துவிடுகிறார் இயக்குனர்.

ஃபோர்ஸ்

சுஷாந்த் தோனியைப்போலவே அமைதியான முகம், ஹெலிகாப்டர் ஷாட்கள் அடிப்பது, மேனரிசங்கள் என்று நிறைய மெனக்கெட்டிருக்கிறார். அவரை தேர்ந்தெடுத்ததற்கு ஒரு நான்கு ரன்கள் கொடுத்துவிடுவோம். இன்னும் கொஞ்சம் நடிப்பில் முதிர்ச்சி இருந்தால் ஆறே கொடுத்திருக்கலாம். தோனியின் அப்பாவாக வருகிற அனுபம் கேர் எப்போதும் போல் அபாரம். மற்றவர்களும் ஈடுகொடுத்து நடித்திருக்கிறார்கள். 

அடுத்த ஃபோர் தோனி விளையாடிய மேட்சுகளையெல்லாம் தேடிப்பிடித்து அவரது அநாயாசமான ஷாட்களை காட்டியதற்காக. நடுவில் தோனிக்கு பதிலாக சுஷாந்தை புகுத்தி கிராபிக்ஸ் வித்தை காட்டியிருப்பது அருமை. ஆனால் அவர் நடித்த விளம்பரங்களையும் மறுபடி காட்டும்போது நமக்கு ‘ஙே’ என்று ஆகிவிடுகிறது (உங்க கஷ்டம் புரியுது தயாரிப்பாளரே!)

ரன் அவுட் 

படத்தின் இரண்டாம் பாதியில் இந்திய சினிமாவின் சாபக்கேடான பாடல்கள் இரண்டு வரும்போது வேகத்தடை ஏற்பட்டு ‘மறுபடி பாட்டை போடாதீங்கடா’ என்று பக்கத்தில் இருந்தவர் புலம்பும்படி ஆகிறது. இந்த நேரத்தில் படம் ரன் அவுட் ஆகிவிடுமோ என்று பயப்படும்போது காதலியின் இறப்பு நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தி படம் தப்பித்துவிடுகிறது. இரண்டாவது காதலான சாக்‌ஷியின் சீன்களும் ஹைக்கூ கவிதையாக சட்டென முடிக்கப்படுகிறது.

க்ளீன் போல்ட்

தோனியின் புகழுக்கு காரணமான அவரது சாமர்த்திய முடிவுகள் (எந்த பௌலரை எப்போது போடச்சொல்வது, டெண்டுல்கர் போன்றவர்களை திடீரென பௌலிங் போடவைத்து விக்கெட் எடுப்பது போன்றவை) படத்தில் இடம்பெறவே இல்லை என்பது க்ளீன் போல்ட் போன்றதொரு உணர்வை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே படம் 3 மணி நேரத்திற்கு மேல் ஓடுவதால் இதை மன்னித்து விட்டுவிடலாம் (No ball)

ஆகமொத்தத்தில் பாதி கதை தெரிந்ததே என்பதால் படம் செஞ்சுரி அடித்தது என்று சொல்லமுடியாவிட்டாலும் கண்டிப்பாக தோனியின் ஆட்டம்போல் விறுவிறுப்பாகவே இருந்தது.

நல்ல வாழ்க்கைப்படமா (biopic) இல்லையா?


சில விமர்சகர்கள் இது ஒரு நல்ல வாழ்க்கைப்படமாக இல்லை, தோனியை ஒரேயடியாக உயர்த்திக்காட்டுகிறார்கள், அவரது தவறுகளை சுட்டிக்காட்டவில்லை என்று சொல்லியிருக்கின்றனர். இது ஓரளவுக்கு உண்மைதான். அவர் 2009ல் சீனியர் ஆட்டக்காரர்களை அவர்களது வேகமின்மை காரணமாக நீக்கவேண்டும் என்று கேட்கிறமாதிரி ஒரு சீன் இடம்பெற்றிருக்கிறது. அதை மீடியா எப்படி திரித்து பேசியது என்றும் காண்பித்திருக்கிறார்கள். அவருக்கும் சேவாகுக்கும் பகை என்றால் எப்படி உலகக்கோப்பையின் போது சேவாகை மறுபடி சேர்த்துக்கொண்டார்கள்? CSK ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் அவர் பங்கு என்ன என்பது பற்றி எதுவும் காட்டவில்லை. என்னைக்கேட்டால் படத்தின் பெயருக்கு ஏற்றவாறு இதுவரை மீடியாவில் சொல்லப்படாத கதையை மட்டும் சொல்லியிருக்கிறார்கள். மீடியா சொல்லிய ‘கதை’களை எல்லாம் விட்டுவிட்டார்கள். எல்லாவற்றிற்கும் மேல் தோனியின் வாழ்க்கை இன்னமும் முடியவில்லை என்பதால் டெக்னிகலாக இது ஒரு வாழ்க்கைப்படம் இல்லைதான். எழுச்சியூட்டும் (inspiration) படமாக வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.

No comments: